உலகக்கோப்பை தொடரின் நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர் ஆட்டம் முடிந்து இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகக்கோப்பைத் தொடருக்கு சிறந்த விளம்பரப் போட்டியாக இதனைப் பார்க்கிறோம். இறுதி நிமிடம் வரை யாருக்கு வெற்றி என்பதை கணிக்க முடியாமல் இருந்தது.
எங்களின் தோல்விக்கு ஃபீல்டிங் சரியாக செய்யாததே காரணம். 30 முதல் 40 ரன்கள் வரை ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டிருக்கிறோம். பாகிஸ்தான் வீரர்கள் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டோம்.
அதேபோல் சில போட்டிகளில் பேட்டிங்கில் தவறு நடக்கலாம். சில போட்டிகளில் பந்துவீச்சில் தவறு நடக்கலாம். ஆனால் ஒருபோதும் ஃபீல்டிங்கில் தவறு நடக்கக் கூடாது. இந்தப் போட்டியில் ஃபீல்டிங்கில் தவறு செய்தது வருத்தமளிக்கிறது. அடுத்தப் போட்டியில் நிச்சயம் இந்தத் தவறு சரி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கிலாந்து அணி விளையாடும் போட்டிகளின் மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாகவும், மற்ற அணிகளுக்கு பந்துவீச்சுக்கு சாதகமாகவும் பிட்ச்சுகள் அமைவது ரசிகர்களிடையே விமர்சங்களை ஏற்படுத்தியுள்ளது.