பாகிஸ்தான் அணியின் மூத்த வீரராக விளங்குபவர் சோயப் மாலிக். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1999இல் நடந்த ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 38 வயதான இவர், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதால் அணியிலிருந்து நீ்க்கப்பட்டார்.
இதையடுத்து, சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம் 11 மாதங்களுக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆடவர் அணிகளுக்கான டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தொடர் நெருங்கும் நிலையில் தான் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வை அறிவிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இன்னும் போதிய காலம் உள்ளது. தற்போது பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும், அடுத்து பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள போட்டிகளிலும் கவனம் செலுத்திவருகிறேன். டி20 உலகக் கோப்பை தொடர் நெருங்கும் நிலையில், எனது உடற்தகுதியையும் அணியில் எனது நிலையையும் பற்றி தெரிந்த பின்னே நான் எனது ஓய்வை அறிவிப்பேன்" என்றார்.
வலது கை பேட்ஸ்மேன், வலது கை ஆஃப் ஸ்பின்னர் என பார்ட் டைம் ஆல் ரவுண்டரான இவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 35 டெஸ்ட், 287 ஒருநாள், 113 டி20 போட்டிகளில் விளையாடி 12 சதங்கள, 60 அரைசதங்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க: 6 ரன்கள் vs கேட்ச் - ரோஹித், மிஸ்பாவால் கப் கைமாறிய கதை...#T20WorldCup2007