இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 46 ரன்களுடனும், ஹெட் 21 ரன்களுடனும் நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது.
இந்நிலையில், இந்த ஜோடியை ஸ்டோக்ஸ் பிரித்தார். ஹெட் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய மேத்யு வேடுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித், ஐந்தாவது விக்கெட்டுக்கும் 126 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியா அணியின் ரன்களை உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய ஸ்மித், 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேத்யு வேடும் தன் பங்கிற்கு 110 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து ஆட வந்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் 7 ரன்களும், ஜேசன் ராய் 6 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இன்று இறுதி நாள் ஆட்டம் என்பதால் கடினமான இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப் பிடிக்குமா? அல்லது பந்துவீச்சில் ஆஸ்திரேலியா மிரட்டுமா? அல்லது ஆட்டம் ட்ராவாகுமா?, என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.