இந்திய கிரிக்கெட் வீரர் தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார். குறிப்பாக, 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை கோலி இந்த ஆண்டு ஜனவரியில் படைத்தார்.
தனது சிறப்பான கேப்டன்ஷிப்பால், டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் கேப்டன் உள்பட கேப்டன்ஷிப்பில் பல்வேறு சாதனைகளை தனதாக்கிவருகிறார். தற்போது இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி, இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கோலியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி வெற்றிபெறும் 10ஆவது இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்ற தோனியின் (ஒன்பது வெற்றிகள்) சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
அதேசமயம், இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்துள்ளது. முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எதிரணிகள் | வெற்றி வித்தியாசம் | இடம் | தேதி |
வெஸ்ட் இண்டீஸ் | ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் | அன்டிகுவா | ஜூலை 21- 24, 2016 |
இங்கிலாந்து | ஒரு இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் | மும்பை | டிசம்பர் 8 -12, 2016 |
இங்கிலாந்து | ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் | சென்னை | டிசம்பர் 16-20, 2016 |
இலங்கை | ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் | கொழும்பு | ஆகஸ்ட் 3-6, 2017 |
இலங்கை | ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் | பாலக்கேலே | ஆகஸ்ட் 12-14, 2017 |
இலங்கை | ஒரு இன்னிங் மற்றும் 239 ரன்கள் | நாக்பூர் | நவம்பர் 24-27, 2017 |
வெஸ்ட் இண்டீஸ் | ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் | ராஜ்கோட் | அக்டோபர் 4-6, 2018 |
தென் ஆப்பிரிக்கா | ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் | புனே | அக்டோபர் 10-13, 2019 |
தென் ஆப்பிரிக்கா | ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் | ராஞ்சி | அக்டோபர் 19-22, 2019 |
வங்கதேசம் | ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் | இந்தூர் | நவம்பர் 14-16, 2019 |
இதையும் படிங்க: கிரிக்கெட்டின் அரசன் விராட் கோலி....!