சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்ததாக வங்கதேசத்திற்கு எதிரான டி20, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்களின் இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக அசத்தலாக ஆடிவரும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் கிடைக்க பல நாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடருக்குப் பிறகு, நான்காண்டுக்குப் பிறகு அணிக்குள் இடம்பெற்றுள்ளார்.
விஜய் ஹசாரே தொடரில் கேரள அணிக்காக ஆடிய சாம்சன், கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக 212 ரன்களை குவித்தது அவர் மீதான வெளிச்சம் பெற முக்கியக் காரணமாக இருந்தது.
இந்நிலையில் இந்திய அணியில் இடம் கிடைத்தது பற்றி சாம்சன் பேசுகையில், "உலகின் தலைசிறந்த அணிக்காக ஆடப்போகிறேன். டாப் - ஆர்டர் அல்லது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என எந்த நிலையிலும் களமிறங்கத் தயாராகவே உள்ளேன்.
எனது கனவு எப்போதும் இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் ஆடி வெல்ல வேண்டும் என்பதுதான். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி20 தொடரில் இடம்பெறுவேனா என எனக்குத் தெரியாது. ஆனால் அதற்காக நிச்சயம் கடுமையாக உழைப்பேன்" எனத் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழர்