குளோபல் டி20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில் ஃபாப் டூ ப்ளெஸ்ஸிஸ் தலைமையிலான எட்மண்டன் ராயல்ஸ் அணியும் காலின் முன்ரோ தலைமையிலான பிராம்ப்டன் வொல்வ்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற வூல்வ்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன் பின் களமிறங்கிய வூல்வ்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் லெண்டில் சைமன்ஸ், ஜார்ஜ் முனிசி அதிரடி தொடக்கம் தந்தனர். லெண்டில் சைமன்ஸ் 34 பந்துகளில் 59 ரன்களை சேர்த்து வெளியேறினார்.
அதன் பின் களமிறங்கிய ஷாகித் அஃப்ரிடி 23 பந்துகளில் 50 ரன்களை கடந்து தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வூல்வ்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்களை சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத அஃப்ரிடி 40 பந்துகளில் 81 ரன்களை அடித்தார்.
அதன்பின் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எட்மண்டன் அணி தொடக்கம் முதலே எதிரணியின் பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் எட்மண்டன் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது பிராம்ப்டன் வூல்வ்ஸ் அணி. அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஷாகித் அஃப்ரிடி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.