உலக கிரிக்கெட் அரங்கில் பிரிட் லீ, சொயிப் அக்தர், கிளன் மெக்ராத் போன்ற பெயர்கள் மேலோங்கிய காலத்தில் தனது வித்தியாசமான தலைமுடியினாலும், பந்துவீச்சு முறையினாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்தவர் இலங்கையைச் சேர்ந்த லசித் மல்லிங்கா. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம் பெற்றார்.
ஆரம்ப காலத்தில் இவரது பந்துவீச்சு சர்ச்சைகுள்ளானது. அதன் பின் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் எட்டு தகுதி சுற்று ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை தனது யார்க்கர்கள் மூலம் வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இவரின் வருகைக்கு பிறகு இலங்கை அணி 2007, 2011 ஒருநாள் உலகக்கோபை இறுதி போட்டி, 2009, 2012 டி20 உலகக்கோபை இறுதிபோட்டிகளில் தனது பந்துவீச்சு திறமையால் அணியை முன் எடுத்துச்சென்றவர். இவரின் தலைமையிலான இலங்கை அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் யார்க்கர்கள் ஸ்பெசலிஸ்ட், டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் என அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இவரின் யார்க்கர்களும், ஸ்விங் பந்து வீச்சும் இவரின் பெரும் பலமாக அமைந்தன. குறிப்பாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில், தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் சேவாக் மற்றும் சச்சினின் விக்கெட்டுகளை வீழ்த்தியதை யாராலும் மறக்க இயலாது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று முறை ஹாட் ட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் மல்லிங்கா.
எந்த வித போட்டிகளிலும் தனது பந்துவீச்சால் அணியை வெற்றியடைய செய்யும் வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தார் ”ஸ்லிங்கா” என ரசிகர்களால் அழைக்கப்பட்ட மல்லிங்கா. இவரின் பந்து வீச்சுக்கு அடிபணியா பேட்ஸ்மேன்கள் யாருமில்லை.
குறிப்பாக டி20 போட்டிகளில் பல இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றவர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தின் கடைசி பந்தில், இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற போதிலும் தனது பந்துவீச்சால் விக்கெட்டை வீழ்த்தி கோப்பையை வென்று கொடுத்தார்.
இலங்கை அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்ட மல்லிங்கா, காயம் காரணமாக கேப்டன் பதவியிலிருந்து விலகினார். 2016ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகினார் மல்லிங்கா. அதன்பின் இலங்கை அணியின் தொடர் தோல்விகள் காரணமாக 2017ஆம் ஆண்டு மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
வயது காரணமாக இவரது பந்துவீச்சு குறித்து அனைவராலும் விவாதிக்கப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தார். விளையாடுவதற்கு வயது முக்கியமில்லை என்பதை இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நிரூபித்தார்.
உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்ற நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதைபோலவே நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரில் தமிம் இஃபாலின் விக்கெட்டையும், கடைசி பந்தில் முஷ்தபிசூர் ரஹ்மானின் விக்கெட்டையும் வீழ்த்தி கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் லசித் மல்லிங்கா.