உறவினர்கள் இல்லாமல் கூட இவ்விலகில் வாழ்ந்திடலாம்; ஆனால், நண்பர்கள் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம். எந்தவித ரத்த பந்தமும் இல்லாமல் அமையும் ஒரே உறவு நண்பன்தான். அத்தகைய உறவை கொண்டாடும் விதமாக இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வார ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ந்து கொண்டாடுகின்றனர்.
'பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க...', 'முஸ்தஃபா முஸ்தஃபா', நட்புக்கொரு கோயில் இங்கு எவனும் கட்டவில்ல... நட்பேதான்டா கோயில், அட தனியா தேவ இல்ல' உள்ளிட்டு பாடல்களை இணையதளத்தில் ஸ்டேட்டஸாகவும் பதிவிட்டுவருகின்றனர்.
அந்தவகையில், இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, இந்திய அணியின் முன்னாள் வீரரும் அவரது நெருங்கிய நண்பனுமான வினோத் காம்ப்ளியுடன் இருக்கும் இளம் பருவ புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், நமது பள்ளிப்பருவ காலத்தில் நாம் எடுத்த புகைப்படத்தை பார்த்தவுடன் பழைய நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வந்தது என்று குறிப்பிட்டுருந்தார்.
இதற்கு, வினோத் காம்ப்ளி இந்தப் புகைப்படம் பழைய நினைவுகளை கொண்டுவந்துள்ளது மாஸ்டர். நாம் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, கீழே விழுந்த காத்தாடியை வைத்து விளையாடினேன். அப்போது நமது பயிற்சியாளர் அர்ச்ரேக்கர் என்னை நோக்கி வந்ததை நீ என்னிடம் சொல்லவில்லை. அதன்பின் நமக்கு என்ன நடந்தது என்று உனக்கும் தெரியும் அல்லவா! என பதிலளித்து சச்சின் பகிர்ந்த பழைய நினைவுகளில் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு சச்சின், நாம் கிரிக்கெட் விளையாடிய பழைய நினைவுகளை மிஸ் செய்கிறேன். நீ ஏன் திரும்பி வரக்கூடாது நாம் ஏதாவது குறும்புத்தனமாக செய்வோம் என தனது ட்விட்டரில் பதிலளித்துள்ளார். இணையதளத்தில் சச்சின், வினோத் காம்ப்ளியின் இந்தப் பதிவுகள் வைரலாகிவருகிறது. சச்சின் - வினோத் காம்ப்ளி பள்ளிப்பருவத்திலிருந்த நண்பர்களாக இருக்கின்றனர்.
இருவரும் பள்ளிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதில், சச்சின் 329 ரன்களும், வினோத் காம்ப்ளி 349 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.