இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால், வங்கதேச அணிக்கு எதிராக இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டி, இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
இப்போட்டியில் விளையாடுவதன் மூலம், ரோகித் சர்மா 100ஆவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.
அதுமட்டுமின்றி, 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் இன்று பெறவுள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் இதுவரை 111 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டி20 போட்டியில் ரோகித் சர்மா இதுவரை, நான்கு சதம், 17 அரைசதம் உள்பட 2,452 ரன்களை எடுத்துள்ளார். 100ஆவது போட்டியில் களமிறங்கும் அவர், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிபெற வைப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.