சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் 'சாலைப் பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்' நேற்று (மார்ச் 5) சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்பூரில் தொடங்கியது.
நேற்று நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணி, முகமது ரஃபீக் தலைமையிலான வங்கதேச லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச லெஜண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் நஸிமுதின் - ஒமர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒமர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நஸிமுதின் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
இதனால் 19.4 ஓவர்களிலேயே வங்கதேச லெஜண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் வினய் குமார், யுவராஜ் சிங், பிரக்யான் ஓஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வீரேந்திர சேவாக் - சச்சின் டெண்டுல்கர் இணை களமிறங்கியது. இதில் ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக், எதிரணியின் பந்துகளை சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் - சேவாக் இணை 10.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டினர். இதன்மூலம் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் வீரேந்திர சேவாக் 80 ரன்களுடனும், சச்சின் டெண்டுல்கர் 33 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியை வெற்றிபெறச் செய்த வீரேந்திர சேவாக் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க:4ஆவது டெஸ்ட்: சதமடித்து மிரட்டிய பந்த்; முன்னிலை பெற்றது இந்தியா!