இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்படவுள்ளார்.
இந்நிலையில் ரஹானேவின் கேப்டன்சி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல், “மெல்போர்னில் ரஹானே இந்திய அணியை வழிநடத்தி வெற்றியைத் தேடித்தந்ததில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் 2017ஆம் ஆண்டு தர்மசாலா டெஸ்ட் போட்டியிலேயே ரஹானே இதனை செய்துகாட்டினார்.
அந்தப் போட்டிக்கும் மெல்போர்ன் போட்டிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அதிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது, அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அப்போட்டியிலும் ரஹானே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என பல ஒற்றுமைகள் உள்ளன.
தர்மசாலா போட்டியிலும் ரஹானே தனது ஐந்து பந்துவீச்சாளர்கள் யுக்தியை கடைப்பிடித்திருந்தார். அதிலும் வார்னர் மற்றும் ஸ்மித்தின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க அறிமுக வீரர் குல்தீப் யாதவைப் பயன்படுத்தினார். அவரின் அந்த துணிச்சலான முடிவு இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.
அதேபோன்று மெல்போர்ன் டெஸ்டிலும் ஐந்து பந்துவீச்சாளர்கள் யுக்தி மற்றும் அறிமுக பந்துவீச்சாளர் சிராஜுக்கு வாய்ப்பு என தனக்கே உரித்தான துணிச்சலை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெறச் செய்துள்ளார். ரஹானே அணியை வழிநடத்தும் விதத்தைப் பார்த்தால், அதற்காகவே பிறந்ததுபோல் தோன்றுகிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கங்குலிக்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை - மருத்துவர்கள்