இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜன.15) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் லபுசாக்னே 108 ரன்களும், பெயின் 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 8 ரன்களிலும் , ரஹானே 2 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, “நடராஜனுக்கு ஐபிஎல் போட்டி நல்லவிதமாக அமைந்தது. ஐபிஎல் போட்டியினால் ஏற்பட்ட தன்னம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதை போலவே தனது முதல் டெஸ்டிலும் துல்லியமாக பந்துவீசினார்.
முதல் டெஸ்டை விளையாடும் நடராஜன், பந்துவீச்சு குறித்து நன்கு அறிந்துள்ளார். இதுதான் இந்திய அணிக்கு தேவை. அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோமோ அதைச் செய்ய முயல்கிறார். அவருக்கு நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: டிராவில் முடிந்தத மும்பை - ஹைதராபாத் போட்டி