இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜூலை 30) செளதாம்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி டேவிட் வில்லியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இறுதியில் அயர்லாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியின் அறிமுக வீரர் கர்டிஸ் கேம்பர் 59 ரன்களை அடித்தார். இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி 30 ரன்களை மட்டுமே வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி 27.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை (173) எட்டியது. சாம் பில்லிங்ஸ் 67 ரன்களுடனும், மோர்கன் 36 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி மனிதனின் வெற்றிக்கு காரணமாக இருந்த டேவிட் வில்லி ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆட்டநாயகன் விருதை பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் இடம் பெற்று வருகிறேன். ஆனாலும் சென்ற ஆண்டு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பெறாமல் போனது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் தற்போது இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாடுவது சிறப்பாக உள்ளது.
அதனை அனுபவிக்கவே நான் விரும்புகிறேன். இங்கிலாந்து அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக வலைபயிற்சியில் நான் கடினமாக உழைத்தேன். எனது சிறப்பான ஆட்டம் இனிமேல்தான் வெளிப்படும்" என்றார். இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 1) நடைபெறள்ளது.