யார்க்கர் மன்னன் என்றழைக்கப்படும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, தனது மிரட்டலான பந்துவீச்சின் மூலம் பல முன்னணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கன்டியில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 174 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து, 175 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய முன்ரோ, மலிங்காவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். பின்னர், அதிரடியாக விளையாடி வந்த காலின் டி கிராண்ட்ஹோமை மீண்டும் மலிங்கா அவுட் செய்தார். இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து மலிங்கா சாதனை படைத்துள்ளார்.
இதுவரை 74 டி20 போட்டிகளில் விளையாடிய மலிங்கா 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால், இப்பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடியின் (98) சாதனை முறியடிக்கப்பட்டது. இப்போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்து வீசினாலும், நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி 175 ரன்களை எட்டியது. இதனால், நியூசிலாந்து அணி இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.