இந்தியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ஆம்பன் புயலால் கொல்கத்தா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. மேலும், இப்புயலின் கோரதாண்டவத்தால் மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், லட்சக்கணக்கான மரங்கள் முறிந்தும், பல பகுதியில் சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டும் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் மூலம் நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து கொல்கத்தாவின் வெள்ள நிவாரண நிதியாக ரூ.1000 கோடி வழக்குப்படும் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்தின் பொதுமக்களுக்கு உதவும் வகையில், மேற்கு வங்க அரசிற்கு ஐபிஎல் தொடரின் சாம்பியன் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உதவிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து அந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மேற்கு வங்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு குறிப்பிட்ட நிதியுதவி வழங்கியும், ஆம்பன் புயலால் சேதமடைந்த இயற்கையை மீட்கும் வகையில் கொல்கத்தா முழுவதும் சுமார் 5000 மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை கேகேஆர் நிர்வாகம் பராமரிக்கும்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நகரங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும், மேலும் அப்பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு தேவையான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இச்செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:போதைப்பொருள் சர்ச்சை: அதிரடியாக அணியை வீட்டு நீக்கிய இலங்கை!