இந்தியாவில் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த 13ஆவது ஐபிஎல் டி20 தொடர் கரோனா வைரஸ் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் இப்பெருந்தொற்றால் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒருவேளை டி20 உலகக் கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால், அந்த இடைப்பட்ட காலத்தில் (அக்டோபர் - நவம்பர்) ஐபிஎல் டி20 தொடரை பார்வையாளர்களின்றி நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால், டி20 உலகக்கோப்பையின் தலை விதி குறித்த இறுதி முடிவை ஐசிசி இம்மாதத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசியின் முடிவைப் பொறுத்தே பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.
தற்போதைய சூழலில் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்துவது சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது. இந்தச் சூழலில், ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்திக்கொள்ள இலங்கை கிரிக்கெட் வாரியமும், ஐக்கிய அரபு அமீரகமும் விருப்பம் தெரிவித்திருந்தன.
இது குறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஐபிஎல் தொடரை எங்கு நடத்த வேண்டும் என்பது குறித்த முடிவை நாங்கள் இன்னும் எடுக்கவில்லை. இந்தத் தொடரை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் தான் எங்களுக்கு விருப்பம் உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லாததால் இந்த தொடர் பெரும்பாலும் வெளிநாடுகளில் நடைபெறும். குறிப்பாக இந்த தொடரை நடத்துவதில் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இரு நாடுகளிலும் கரோனா வைரஸ் சூழ்நிலையைப் பொறுத்தே எந்த நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்பதை நாங்கள் தீர்மானிப்போம். மேலும், இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்பும் முக்கியம் என்பதால் இது குறித்த இறுதி முடிவை விரைவில் நாங்கள் எடுப்போம்" என்றார்.