ஐபிஎல் தொடரில் இன்று (அக்.24) நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீசத் தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியினர், எதிரணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 30 ரன்களை எடுத்தார். ஹைதராபாத் அணி தரப்பில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் வார்னர் - பேர்ஸ்டோவ் இணை சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தனர். பேர்ஸ்டோ 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, வார்னர் 35 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே - விஜய் சங்கர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் வந்த வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் ஹைதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தனது பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.