#INDvsRSA: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது மூன்று டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ரோஹித் ஷர்மா, மயங்க் அகார்வால் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் டெஸ்ட்டில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா இந்த போட்டியில் 14 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

அதன்பின் அகர்வாலுடன் இணைந்த புஜாரா, சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார். இருவரும் அரை சதமடித்த நிலையில், புஜாரா 58 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அதன்பின் அகர்வால் 16 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 108 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சோர்ந்த கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 23ஆவது அரைசதத்தினை கடந்தார்.

அதனைத் தொடர்ந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களைச் சேர்தது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிங்க: கங்குலியை முந்திய கோலி... இன்னும் தோனி மட்டும்தான் பாக்கி!