இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்சமயம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 05ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான 6 காரணங்களை இத்தொகுப்பில் காணலாம்.
1. டாஸ்
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது அந்த அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். ஏனெனில் சென்னை மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் முதல் இரண்டு நாள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும்.
இதன் காரணமாகவே முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் டாம் சிப்லி 87 ரன்களையும், கேப்டன் ஜோ ரூட் 128 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களையும் விளாசினர்.
2. ஜோ ரூட்
இப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதற்கான முக்கிய காரணம் ஜோ ரூட் என்றுதான் சொல்ல வேண்டும். களத்தில் நின்று இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ஜோ ரூட், இரட்டை சதத்தைக் கடந்தது இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்தது.
3. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து முன்னிலை
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆனால் அதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 241 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருந்தது.
அதன்பிறகு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்த முன்னிலை வெற்றி பெறுவதற்கு பெரும் உதவியாக அமைந்தது.
4. சொதப்பிய ரோஹித், ரஹானே
இப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே போன்ற நட்சத்திர வீரர்கள் சொதப்பியதும் மிக முக்கிய காரணமாகும். ஏனெனில் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் இவர்களது அனுபவ ஆட்டம் நிச்சயம் இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்க உதவிருக்கும்.
ஆனால் இவர்கள் இருவரும் இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்தது அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.
5. பந்துவீச்சிலும் தடுமாற்றம்
இப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் 27 நோ-பால்களை வீசியுள்ளனர். முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் இஷ்டத்திற்கு ரன்களை வாரி வழங்கினர்.
இதுவே இங்கிலாந்து அணியினர் இமாலய இலக்கை நிர்ணயிக்க ஏதுவாக அமைந்தது.
6. தவறான தேர்வு
இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக சபாஷ் நதீமிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார் என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் இப்போட்டியில் 233 ரன்களை கொடுத்து நான்கு விக்கெட்டுகளை மட்டுமே அவர் வீழ்த்தியுள்ளார்.
மேலும் குல்தீப் யாதவ் போன்ற சுழற்பந்துவீச்சாளர் அணியில் இருக்கும் போது சபாஷ் நதீமிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது அணியின் தோல்விக்கு ஒரு காரணம் என்று தான் கூறவேண்டும். ஏனெனில் குல்தீப் யாதவ் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடத்திற்கு முன்னேறியது இங்கிலாந்து!