இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.
முதல் இன்னிங்ஸ் (இந்தியா)
இதையடுத்து இந்திய இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், அதிரடி வீரர் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி, சர்வதேச டெஸ்டில் தனது ஏழாவது சதத்தைப் பதிவுசெய்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த ரோஹித் சர்மா, இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 161 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 329 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவுசெய்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி, அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 59.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது.
இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 29ஆவது ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 195 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தது.
மளமளவென சரிந்த விக்கெட்டுகள்
அதில் இளம் வீரர் சுப்மன் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 26 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் களமிறங்கிய புஜாரா (7), ரிஷப் பந்த் (8), ரஹானே (10) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
கோலி - அஸ்வின் பார்ட்னர்ஷிப்
அதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
பின்னர் சதமடிப்பார் என்ற எதிர்பார்த்த விராட் கோலி 62 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். இருப்பினும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்டில் தனது ஐந்தாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 106 ரன்களையும், விராட் கோலி 62 ரன்களையும் எடுத்தனர். இதன்மூலம் இந்தியா அணி 483 ரன்கள் என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது.
ஆரம்பமே அதிர்ச்சி
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லி, டேனியல் லாரன்ஸ், ஜேக் லீச் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்கப் போராடினார். பின் அவரும் 33 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
அக்சர் அபாரம்
இறுதியாக மொயீன் அலி மைதானத்தில் சிக்சர்களைப் பறக்கவிட, மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணமே இருந்தன. இறுதியில் 164 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. இந்திய அணியின் அறிமுக பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடித்துள்ளன. இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பிப்ரவரி 23ஆம் தேதி அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: சீஹ் சு வேய்யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஒசாகா!