டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில், ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறது.
நியூசிலாந்து-மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்த அணி கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 116 புள்ளிகள் பெற்றது. இதன்மூலம், ஐசிசியின் புள்ளிகள் பட்டியலில் 116 புள்ளிகளுடன் உள்ள ஆஸ்திரேலியா அணியுடன் நியூசிலாந்து அணி முதல் இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடம் வகிப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஐசிசி, "டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்தைவிட நூலிழை வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலியா 116.461 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 116.375 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியல்:
1. ஆஸ்திரேலியா
2. நியூசிலாந்து
3. இந்தியா
4. இங்கிலாந்து
5. இலங்கை
6. தென் ஆப்பிரிக்கா
7. பாகிஸ்தான்
8. மேற்கு இந்தியத் தீவுகள்
9. வங்க தேசம்
10. ஜிம்பாப்வே
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிங்க: டெஸ்ட் தொடருக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்