கர்நாடகாவைச் சேர்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெ. அருண்குமார். இவர் ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர் முதல் தர போட்டிகளில் 7,200 ரன்களை குவித்துள்ளார். அதேபோல், லிஸ்ட் ஏ போட்டியிலும் 3,000 ரன்களை அடித்துள்ளார்.
இவரது பயிற்சியின் கீழ் கர்நாடக அணி 2013-14, 2014-15 என அடுத்தடுத்த சீசன்களில் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே தொடர், இராணி கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளை வென்றது. முதல் தர போட்டிகளில் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக திகழும் ஐபிஎல் தொடர்களில் இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் அமெரிக்க கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஜேம்ஸ் பாமென்டிற்கு பதில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமை பயிற்சியாளராக அருண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் இயன் ஹிகின்ஸ் உறுதி செய்துள்ளார்.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் பாமென்டின் செயல்பாடு திருப்தி இல்லாத காரணத்தால் அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரராகவும் பயிற்சியாளராகவும் ஜெ. அருண்குமாருக்கு போதிய அனுபவம் இருப்பதால் அவர் இப்பதவிக்கு பொறுத்தமானவர் என இயன் ஹிகின்ஸ் தெரிவித்தார். மேலும் அணி வீரர்கள், தேர்வாளர்கள், ஊழியர்கள் ஆகியோரை சந்தித்து ஒப்பந்தத்தை நேரில் கையெழுத்திடுவதற்காக அவர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அமெரிக்காவில் தங்கும் வகையில் இவரது விசா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவருடன் இணைந்து பணிபுரிவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் இயன் ஹிகின்ஸ் கூறினார்.
முன்னதாக அமெரிக்க அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான அந்தஸ்தை பெற்றிருந்தது. தற்போது அருண்குமாரின் வருகையால் அந்த அணி நிச்சயம் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சி.எஸ்.கே.வைப் போன்று எந்த அணியும் கிடையாது - டுவைன் பிராவோ!