ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அப்போட்டியின் இறுதி ஓவரின் நான்காவது பந்து அதிக உயரத்தில் ஃபுல்-டாஸாக வீசப்பட்டதால் மெயின் அம்பயர் நோ-பால் என அறிவித்தார். ஆனால் அதனை லெக் அம்பயர் நோ-பால் அல்ல எனக் கூறினார். இதனால் அம்பயர்களுக்கிடையே குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த தோனி யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென களத்திற்குள் சென்று அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனி கோபமடைந்ததால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். இச்சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், இது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து ப்ளெமிங் பேசுகையில், தோனி களத்திற்குள் சென்றக் காரணம் அந்த பந்து குறித்தான தெளிவினை அறிந்துகொள்ளதான். இரு நடுவர்களில் ஒருவர் நோ-பால் என அறிவித்தும் மற்றொரு நடுவர் நோ-பால் இல்லை என அறிவிப்பதும் ரசிகர்களை மட்டுமல்ல அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
கேப்டன் தோனிக்கு அந்த பந்து குறித்த தெளிவான பார்வை தேவைப்பட்டதால் களத்தில் சென்று நடுவர்களிடம் கேட்டறிந்தார். அவர் செய்த இச்செயலை பலர் கேள்விக்குள்ளாக்குவார்கள் என நினைக்கிறேன் என்றார்.