இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி மொத்தம் 332 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஆக. 22) நடந்த ஆட்டத்தில் ஜாக் கிரேலி - ஜோஸ் பட்லர் இணை பேட்டிங்கை தொடர்ந்தனர். இதில், சிறப்பாக ஆடிய இளம் வீரர் ஜாக் கிரேலி இரட்டை சதம் விளாசினார். மறுமுனையில், ஜோச் பட்லர் நீண்ட நாள்களுக்கு பிறகு தனது இரண்டாவது சதத்தை விளாசினார்.
சிறப்பாக ஆடிய இந்த இணையால், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 400ஐக் கடந்தது. கிரேலி 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷாஃபிக் பந்தில் ஆட்டமிழந்து அவர் வெளியேறினார். மறுபக்கம் அதிரடியாக ஆடிய பட்லர், 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 583 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்கள் ஷான் மசூத் 4 ரன்களிலும், அபித் அலி 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, அவர்களைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் பாபர் அஸாமும் 11 ரன்களில் வெளியேறினார். இதனால் பாக். அணி 24 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் அப்பாவான டூ ப்ளஸிஸ் - ரசிகர்கள் வாழ்த்து!