இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றியை பதிவுச் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 - 0 என்று முன்னிலை பெற்றது.
இந்நிலையில், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில், டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் பாகிஸ்தான் அணி நேற்று களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர் இமாம்-உல்-ஹக் 6 ரன்னில் இருந்தபோது, மார்க்வுட் வீசிய பந்தில் காயமடைந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் பஹார் ஜமாம் 57, பாபர் அஸாம் 115, ஹபீஸ் 59, மாலிக் 41 என அனைவரும் அடித்து ஆட்டமிழந்தனர். இதனால், பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் டாம் குர்ரான் 4, ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அதைத் தொடர்ந்து மீண்டும் இமாலய இலக்கை நோக்கிய ஆடிய இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. அந்த அணியின் வீரர்கள் ஜேசன் ராய் 114, வின்ஸ் 43, ஜோ ரூட் 36 ரன்கள் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர். எனினும் அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிற்க, கேப்டன் ஜோஸ் பட்லர்-0, மோயின் அலி- 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் பின்வரிசை வீரர்கள் கம்பெனி கொடுக்க பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடி கலந்த பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 341 ரன்கள் எடுத்து மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியதோடு ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ஜோஸ் பட்லர் 71 ரன்னுடனும் (64 பந்துகள், 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்), அடில் ரஷித் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றிய நிலையில், ஐந்தாவது போட்டி ஹீட்ஸில் நாளை நடைபெறுகிறது.
உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் இந்தத் தொடரில் பாகிஸ்தனை பின்னி பெடலெடுத்த இங்கிலாந்து அணி, சிறப்பான ஃபார்மில் உள்ளது, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.