இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்னை அணியினர் கடந்த வாரம் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை அணியைச் சேர்ந்த வீரர்கள் உள்பட சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ரெய்னாவுக்கு, சென்னை அணி நிர்வாகம் தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் ரெய்னாவின் உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது மாமா உயிரிழந்துவிட்டதாகவும், அதற்காகதான் ரெய்னா இந்தியா திரும்பி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இது குறித்து பேசிய ஐபிஎல் அலுவலர் ஒருவர், ”ரெய்னா, அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாவே விலகியுள்ளார். துபாயில் தங்கவைக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில், தோனிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பால்கனி இருந்துள்ளது. தோனிக்கு மட்டும் பால்கனியுடன் கூடிய, நல்ல காற்றோட்டமான அறையை ஒதுக்கிவிட்டு, தனக்கு சாதாரண அறையை ஒதுக்கியது குறித்து அறை பொறுப்பாளரிடம் ரெய்னா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஒரேயொரு அறை மட்டுமே பால்கனியுடன் இருந்ததாகவும், அதனால் தான் ரெய்னாவுக்கு பால்கனி அறை ஒதுக்க முடியாமல் போனதாகவும் அறை பொறுப்பாளர்கள் அவரிடம் விளக்கமளித்துள்ளனர். ஆனால் ரெய்னா அதனை ஏற்க மறுத்து, அணி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். சிஎஸ்கே நிர்வாகிகளும் இதனைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டனர். இதன் காரணமாகதான் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகி, இந்தியாவிற்குக் திரும்பினார்” என்றார்.
தொடர்ந்து, இந்த சீசனில் ரெய்னா திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளாதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நிச்சயமாக ரெய்னா இந்த சீசனில் பங்கேற்க மாட்டார். ஏனெனில் அவரது முடிவைத் தொடர்ந்து, சென்னை அணியும் இந்த சீசனில் ரெய்னா பங்கேற்க மாட்டார் என அறிவித்துள்ளது. அதே சமயம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத ஒருவரை சிஎஸ்கே அணி இனியும் தக்கவைத்துக் கொள்ளாது என்றே தெரிகிறது.
எனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தின்போது ரெய்னா மீண்டும் சென்னை அணிக்காக விளையாடப் போகிறாரா அல்லது வேறொரு அணிக்காக விளையாடுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்’” என்று தெரிவித்தார்.
ஐபிஎல் தொடக்க சீசனான 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, இதுவரை 193 போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம், 38 அரைசதங்கள் என மொத்தம் 5,368 ரன்களைக் குவித்துள்ளார். ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சராசரியாக 400 ரன்களுக்கு மேல் ரெய்னா விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மன்கட் விஷயத்தில் அஸ்வின் மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டார்: டெல்லி உரிமையாளர் ஜிந்தால்