ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 2020-21ஆம் ஆண்டிற்கான வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த உஸ்மான் கவாஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்துள்ளப் பேட்டியில், 'இனி கவாஜா அணியில் இடம்பிடிப்பது கடினமானது' எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாண்டிங் கூறுகையில், 'அவரை நினைத்தால் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் உண்மையைக் கூற வேண்டுமென்றால், கவாஜா மீண்டும் அணியில் இடம்பெறுவது கடினமான காரியமாகும். எனக்கு அவர் விளையாடும் விதம் மிகவும் பிடிக்கும். அதுமட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நான் அவருடன் நன்கு பழகி வந்துள்ளேன்.
அவர் எப்போதும் ஒரு நல்ல வீரராக வலம் வந்துள்ளார். ஆனால், சர்வதேச அளவில் அவரது ஃபார்ம் தற்போது மோசமாக உள்ளது என தேர்வு குழுவினர் கருதலாம். என்னைப் பொறுத்தவரை அவர் ஆஸ்திரேலிய அணிக்காக இன்னும் அதிக போட்டிகளில் களமிறங்குவார் என நினைத்திருந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, இதுவரை 44 டெஸ்ட் மற்றும் 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 சதங்களுடன் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜூலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர் நடப்பது உறுதி...!