இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கானத் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. இதில் 'குரூப் பி' பிரிவில் இடம்பெற்றுள்ள விதர்பா அணி, ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விதர்பா அணியின் தொடக்க வீரர்கள் ஃபஸல், அக்ஷய் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். பிறகு ஃபஸல் 14 ரன்களிலும், அக்ஷய் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய விதர்பா அணி வீரர்கள் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
குறிப்பாக 13ஆவது ஓவரை விசிய தீபக் சஹார், ஓவரின் முதல் பந்தில் ருஷாப் ரத்தோட்டின் விக்கெட்டையும், அதே ஓவரின் 4,5,6வது பந்துகளை வீசும்போது ஸ்ரீகாந்த், தர்ஷன், வாட்கர் என ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதன் முலம் தீபக் சஹார் ஓரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் விதர்பா அணி 13 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இந்திய டி20 அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் தீபக் சஹார், கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு ஹாட்ரிக் விக்கெட்... பழைய ரெக்கார்டை உடைத்தெறிந்த சாஹர்...!