தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாகத் திகழ்பவர் ஃபாப் டூ பிளெசிஸ். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவரது தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி லீக் சுற்றுகளோடு வெளியேறியது. இதனால் தனது கேப்டன்சியைத் துறந்த டூ பிளெசிஸ் அணியில் ஒரு வீரராக மட்டுமே விளையாடிவந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் 199 ரன்களை எடுத்து, நூலிழையில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பதிவுசெய்யும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
இதையடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக ஃபாப் டூ பிளெசிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (பிப். 17) அறிவித்துள்ளார்.
டூ பிளெசிஸின் பதிவில், "இது நம் அனைவருக்கும் ஒரு கடினமான ஆண்டாகும். ஆனால் இது பல வகைகளில் என்னைத் தெளிவுப்படுத்தியுள்ளது. எனது கேட்கும்திறன் (Hearing) தெளிவாக உள்ளது, புதிய அத்தியாயத்திற்குள் செல்ல சரியான நேரம் இது.
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் எனது நாட்டிற்காக விளையாடுவது ஒரு மரியாதை, ஆனால் நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது.
15 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது என்னிடம், நீ தென் ஆப்பிரிக்காவுக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாய், அணியின் கேப்டனாக இருப்பாய் என்று கூறியிருந்தால் நான் அவர்களை நம்பியிருக்க மாட்டேன்.
ஆனால் எனக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதம் நிறைந்த டெஸ்ட் வாழ்க்கைக்கு நான் மிகவும் நன்றியுள்ள இடத்தில் நிற்கிறேன் என நினைக்கிறேன்.
அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐசிசி டி20 உலகக்கோப்பை ஆண்டுகள். இதன் காரணமாக எனது கவனம் டி20 கிரிக்கெட்டிற்கு மாறியுள்ளது. டி20 கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட எனக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஆனால் அதற்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று அர்த்தமல்ல, நான் டி20 கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஃபாப் டூ பிளெசிஸ், 10 சதங்கள், 21 அரைசதங்கள் என 4,169 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரில் பும்ரா ஓய்வு: கம்பேக் கொடுப்பாரா அஸ்வின்?