இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஐந்து டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன.
முன்னதாக, சென்னையில் நடைபெறும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஓராண்டுக்கு பின் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை காண எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பானது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிராக அகமதாபாத்தில் நடைபெறவுள்ள ஐந்து டி20 போட்டிகளுக்கு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐ அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். தற்போதுவரை நாங்கள் அதுகுறித்த உறுதியான முடிவை எடுக்காவிட்டாலும், குறைந்தபட்சம் 50 விழுக்காடு பார்வையாளர்களையாவது அனுமதிக்க முயற்சித்து வருகிறோம். ஆனால் இறுதி முடிவானது அரசிடம் தான் உள்ளது. அரசின் அனுமதியோடு நிச்சயம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது" உறுதி என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘ஸ்மித்திற்கு பந்துவீசுவது மிக கடினம்’ - நவ்தீப் சைனி