இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், தலா மூன்று டி20, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடரின்போது ஆஸ்திரேலியாவுக்கு வந்தடையும் இந்திய வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது. தனிமைப் படுத்துதல் இன் நாட்களை சற்று குறைக்குமாறு பிசிசிஐ தலைவர் கங்குலி கேட்டுக்கொண்டார்.
ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஆஸ்திரேலிய அரசின் விதிமுறையாகும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால தலைமை செயல் அலுவலர் நிக் ஹாக்லி திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதேசமயம் தனிமைப்படுத்துதல் காலத்திலும் பயிற்சி பெறும் வகையில் இந்திய அணிக்கு அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்படும் எனவும் அடிலெய்டு மைதானத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்துதலுக்கு தேவையான வசதிகள் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டவட்டமாக உள்ளதால் திட்டமிட்டபடி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுவது சந்தேகம் என பிசிசிஐ அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,ஆஸ்திரேலியாவில் பின்பற்றும் விதிமுறைகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்பதால் இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் நாட்கள் குறைய வாய்ப்புள்ளது என்றார்.