ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத்தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து அசாத் ஷாஃபிக், பாபர் அசாமின் அதிரடி ஆட்டத்தால் ரன் குவிப்பில் ஈடுபட்டது. சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 157 ரன்களையும், ஷாஃபிக் 119 ரன்களையும் குவித்தனர்.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 428 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியாது.
குறிப்பாக அந்த அணியில் பென்கிரஃப்ட்டை தவிர வேறு எந்த வீரரும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. இதனால் 56 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய ஏ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் இம்ரான் கான் ஐந்து விக்கெட்டுகளையும், அஃப்ரிடி, அஹ்மத் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 306 ரன்கள் முன்னிலை பெற்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்களை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: 'ஹர்திக் பாண்டியாவை விட சிறந்த ஆல் ரவுண்டர் ஹிட்மேன்தான்' - ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியல்!