மகளிர் டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டேன் வான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்பின் ஆஸ்திரேலிய அணிக்கு அலைசா ஹேலி - பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 34 ரன்கள் சேர்த்த நிலையில், அலைசா 18 ரன்களில் வெளியேறினார். பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் மெக் லான்னிங் உடன் ஜோடி சேர்ந்த பெத் மூனி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
8.3 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்திருந்தபோது, பெத் மூனி 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ஜெஸ் ஜோனசன் 1 ரன்னிலும், ஆஷ்லி கார்டனர் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறியதால், ஆஸ்திரேலிய அணி ஸ்கோர் எடுக்க முடியாமல் திணறியது.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறு முனையில் மெக் லான்னிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இவரின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக நாடின் டெ கிளர்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.