ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 2015ஆம் ஆண்டில் இருந்து கேப்டனாக செயல்பட்டு வருபவர் அஸ்கர் ஆஃப்கான். இவரது தலைமையில், ஆஃப்கானிஸ்தான் அணி 31 ஒருநாள் போட்டிகளிலும், 37 டி20 போட்டிகளிலும், முதல் டெஸ்ட் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டன் ஆஃப்கானை அப்பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது. இவருக்கு பதிலாக, டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் ஆகிய மூன்று நிலைப் போட்டிகளுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் ஒருநாள் போட்டிகளுக்கானக் கேப்டனாக குல்பதின் நைப், டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹ்மத் ஷா மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக நட்சத்திர வீரர் ரஷீத் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு ஒருமாதம் முன்னர் இந்த நடவடிக்கையை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அஸ்கர் ஆஃப்கானை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கானக் காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.