இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற எலைட் குருப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் மும்பை அணி - ஹரியானா அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்தியாவின் முதல்தர போட்டிகளில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 35 ரன்களை குவித்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.
இதனால் 19.3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹரியானா அணி தரப்பில் ஜெயந்த் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அருண் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹரியானா அணியின் தொடக்க வீரர்கள் அருண், பிஷ்னோய் இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹிமான்ஷு ராணா - ஷிவம் சவுகான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஹிமான்ஷு ராணா அரைசதம் கடந்தார். இதன் மூலம் 17.4 ஓவர்கள் முடிவில் ஹரியானா அணி வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. ஹரியானா அணியில் அதிகபட்சமாக ஹிமன்ஷு ராணா 75 ரன்களுடனும், ஷிவம் சவுகான் 43 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையும் படிங்க: கால்பந்து விளையாட்டில் ஓய்வை அறிவித்து, புதிய அவதாரத்திற்கு மாறிய வெய்ன் ரூனி!