குளோபல் டி20 தொடரின் 7ஆவது லீக் போட்டியில், யுவராஜ் சிங் தலைமையில்லான டொராண்டோ நேஷனல்ஸ் அணியும், ரயட் எம்ரிட் தலைமையிலான வின்னிபெக் ஹாக்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ஹாக்ஸ் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய நேஷனல்ஸ் அணியின் தாமஸ், கேப்டன் யுவராஜ் சிங் மற்றும் பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை விளாசியது. அந்த அணியில் தாமஸ் 65 ரன்களும், யுவராஜ் சிங் 45 ரன்களும், பொல்லார்ட் 52 ரன்களும் எடுத்தனர். ஹாக்ஸ் அணி சார்பில் பிராவோ 4 விக்கேட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹாக்ஸ் அணியின் கிரிஸ் லின், தனது அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினார். அவருடன் சன்னி சொஹலும் கைக்கோர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹாக்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய கிரிஸ் லின் 89 ரன்களும், சொஹல் 58 ரன்களும் விளாசினர்.
இதன் மூலம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வின்னிபெக் ஹாக்ஸ் அணி வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய கிரிஸ் லின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.