ஸ்காட்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதன் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து, களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. இதன் தொடக்க வீரர் கிராஸ் (cross) 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் இணைந்த கைல் கொய்ட்ஸர் - காலம் (calum macleod) மெக்லியோட் இணை ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
கேப்டன் கொய்ட்ஸர் (kyle coetzer) 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அதிரடியாக ஆடிய காலம் மெக்லியோட் (calum macleod) ஒருநாள் போட்டிகளில் தனது எட்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். பின்னர் வந்த வீரர்கள் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 50 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சேஷாய் 14 ரன்களில் வெளியேறினாலும், முகமது சேஷாத் (shahzad) அதிரடியாக ஆடி 55 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ரஹ்மத் ஷா ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை அடித்தார். பின்னர் அதிரடியாக ஆடிய ரஹ்மத் ஷா 113 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, ஷாகிடி - ஆஸ்கர் ஆஃப்கான் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 269 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனையடுத்து மழை தொடர்ந்து பெய்ததால் ஆப்கானிஸ்தான் அணி டக்வொர்த் லீவிஸ் விதிமுறையின்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.