லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஒவல் மைதனத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மித் 6 பவுண்டரிகள் உட்பட 71 ரன்கள் அடித்தார்.
இதனை தொடர்ந்து 3-வது நாள் ஆட்டத்தில் 12 ரன்கள் பிந்தங்கி இருந்த இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி 80 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து இருந்தது. ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களுடனும், அண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்களும், மார்பி 3 விக்கெட்களும், கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 1 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் தொடக்கத்திலேயே ஜோம்ஸ் அண்டர்சன் மார்பியிடம் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 395 ரன்கள் எடுத்து. ஆஸ்திரேலியா அணிக்கு 384 ரன்கள் இலக்காக வைத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 91, ஜானி பேர்ஸ்டோவ் 78, ஜாக் கிராலி 73, பென் டக்கெட் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் மற்றும் மார்பி தலா 4 விக்கெட்களும், ஹேசில்வுட் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் கவாஜா களம் இறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இந்த ஜோடியில் வார்னர் மற்றும் கவாஜா அரை சதத்தை பதிவு செய்தனர்.
பின்னர் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 38 ஓவர்களில் 135 ரன்கள் சேர்த்து அசத்தி உள்ளது. டேவிட் வார்னர் 9 பவுண்டரிகளுடன் 58 ரன்களும், கவாஜா 8 பவுண்டரிகளுடன் 69 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற இன்னும் 249 ரன்கள் தேவையாக உள்ளது.
இதையும் படிங்க: 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி: ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்!