சென்னை: இந்தியாவில் பெரும் மதங்களாக பார்க்கப்படுவது கிரிக்கெட்டும், சினிமாவும்தான். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த இரு துறைகளிலும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நேரில் சந்தித்துக்கொண்டால், அது ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய கொண்டாடமாக இருக்கும் என்பதற்கு தற்போது தோனியும் விஜய்யும் சந்திக்கொண்ட நிகழ்வு சான்றாகியுள்ளது.
மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒப்பந்தம் தொடர்பான சந்திப்பிற்கு சென்னை வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், விளம்பரப்படம் படப்பிடிப்பில் தோனி இன்று கலந்துகொண்டார். அதே ஸ்டூடியோவில்தான் நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகின்றன.
தளபதி ஓகே... ஏன் தல?
ஐபிஎல் தொடரில் பெரிதும் கொண்டாடப்படும் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை நடைபெற்றுள்ள 13 சீசன்களில், 11 சீசன்களில் கேப்டனாக இருந்து மூன்று ஐபிஎல் தொடரை வென்று கொடுத்துள்ளார், தோனி.
என்னதான் தோனி, இந்திய அணிக்கு 2007, டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பின்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி பட்டங்களை வென்றுக்கொடுத்திருந்தாலும், தோனியின் முழு அதிரடியை ரசிகர்களுக்கு காட்டிக்கொடுத்தது சிஎஸ்கேதான். தோனியின் கேப்டன்சியை புகழும்வகையில் தமிழர்கள், அவரை 'தல' என்று செல்லமாக அழைக்கின்றனர்.
2021 ஐபிஎல் தொடர் கரோனா பெருந்தொற்று காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன குறிப்பிடத்தக்கது.
மாஸ்டரும் ப்ளாஸ்டரும்
நடிகர் விஜய்யின் சமீபத்திய 'மாஸ்டர்' திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததை அடுத்து, நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
விஜய்யும், தோனியும் இதற்கு முன்னர் 2008இல் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டபோது சந்தித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அப்போதே இணையத்தில் வலம் பட்டையைக் கிளப்பின. 2008ஆம் ஆண்டுக்கு பிறகு தோனி, விஜய் இருவரும் அவரவர் துறையில் பெரும் முன்னேற்றங்களை கண்டனர்.
தற்போது, தோனி சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றும் தலைப்புச் செய்திகளின் தலைமகனாகதான் வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்யும் பொதுவெளியில் சில செய்யும் சிறு விஷயங்களும் ஊடகங்களுக்கு தீனியாக இருந்துவருகிறது. உதாரணமாக நெய்வேலி செல்ஃபி, தேர்தல் சைக்கிள் பயணம், கார் நுழைவு வரி விவகாரம் ஆகியவற்றை கூறலாம்.
அன்றைய புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, அந்த 13 ஆண்டுகள் இடைவெளி தெரியவே இல்லை என்றுதான் கூறவேண்டும். அதனால், இந்த இரண்டு சார்மிங் பெர்சனால்டிகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தகதகக்கும் 'தல, தளபதி' சந்திப்பு புகைப்படத் தொகுப்பு