2019ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் ஒபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் சிந்துவை எதிர்த்து சீனாவின் கய் யான்யான் விளையாடினார்.
இதன் முதல் செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சிந்து 21-13 எனக் கைப்பற்ற, பின்னர் சுதாரித்துகொண்ட கய் யான்யான் யாரும் எதிர்பார்க்காத வகையில் 17-21 என இரண்டாம் செட்டைக் கைப்பற்றி போட்டியை பரபரப்பாக்கினார்.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாம் செட் ஆட்டத்தில், தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட சிந்து 21-14 எனக் கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 59 நிமிடங்கள் வரை நீடித்தது.
வெளியேறிய சாய்னா:
அதேபோல் காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒகுஹாராவை எதிர்த்து இந்தியாவின் சாய்னா நேவால் ஆடினார். இதன் முதல் செட்டில் ஒகுஹாரா அதிரடியில் கலக்க, சாய்னாவின் எதிர்த் தாக்குதல் எதுவும் எடுபடாமல் போனது. முதல் செட்டை 21-8 என கைப்பற்றிய ஓகுஹாரா, இரண்டாவது செட்டை 21-13 எனக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துவை எதிர்த்து நவோமி ஒகுஹாரா ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.