தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டு தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிதாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், மகளிர் பிரிவில் சாய்னா நேவால் ஆகியோர் சொதப்பினர். இருப்பினும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பாக விளையாடிவருகிறது.
நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்த ஜோடி, தென் கொரியாவின் கோ சங் ஹையுன் / ஷின் பேக் செயோல் (ko Sung Hyun / Shin Baek Cheol) இணையை எதிர்கொண்டது. இதில், சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஜோடி 22-20, 22-24, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஜோடி சீனாவின் லி ஜூன்ஹுய் / லியு யுச்சென் (Li Junhui / Liu Yuchen) இணையை எதிர்கொள்கிறது. இதில், இந்திய ஜோடி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.