மும்பை: பைபோலார் டிஸ்ஆர்டர் மனநோயால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த பின்னர் அதிலிருந்து மீண்டது, மறுபிறவி எடுத்ததுபோல் உணர்ந்ததாக பிரபல டிவி நடிகை ஷாமா ஷிகந்தர் கூறியுள்ளார்.
சினிமா, டிவி தொடர்கள், ரியாலிட்டி ஷோ, வெப்சீரிஸ் என கலக்கி வரும் நடிகை ஷாமா ஷிகந்தர், சுமார் 5 ஆண்டு காலம் வரை பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற மனநோயினால் அவதிப்பட்டுள்ளார். இந்த நோயின் தாக்கத்தால் தான் சந்தித்த சிரமங்களையும், அதிலிருந்து மீண்டது பற்றியும் அவர் கூறியதாவது:
இந்த நோயினால் அவதிப்பட்ட நாள்கள் எனது வாழ்க்கையில் இருள் சூழ்ந்த நேரங்களாக இருந்தன. நான் கண்முழித்த பின் ஒவ்வொரு நிமிடமும் என்னுள் ஒருவிதமான பீதியை ஏற்படுத்தியது. என்ன நடக்கிறது என தெரியாத நிச்சயமற்ற தன்மையை உணர்ந்தேன். ஆசை என்பது எனக்குள் இல்லாமல்போனது. இதனால் நம்பிக்கையும் இல்லாமல் எந்த காரணத்துக்கு உயிர் வாழ்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது.
என்னைப் பொறுத்தவரை இப்படியொரு சூழ்நிலையில் வாழ்ந்துவிட்டால் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆனாலும் மனவலிமையுடன் இதை எதிர்கொண்டு மனச்சோர்வு, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவற்றிலிருந்து மெல்ல மீண்டேன். இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து மறுபிறவி எடுத்ததுபோல் உணர்ந்தேன். ஐந்து ஆண்டுகளாக செத்துவிடாலாம் என்றே எண்ணம் தோன்றின.
இதுபோன்ற பாதிப்புகள் வருவதற்கு சமூகமும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. குழந்தையிலிருந்து நான் உண்மையை பேசியே வளர்ந்தேன். வெளிப்படையாகப் பேசுவதில் எந்த தயக்கமும் காட்டியதில்லை. ஆனால் நம்மை சுற்றி இருப்பவர்கள் குற்ற உணர்ச்சியை நமக்குள் ஏற்படுத்திவிடுகின்றனர். அவர்களில் ஒருவராக நாம் இல்லையென்றால் நமக்கு பல வகைகளில் அச்சுறுத்தல்கள் வருவதுடன், பிரச்னைகள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தனுஷ் நடிப்பில் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற மனநோய் மையக்கருவாக இருந்தது. படத்தில் நடிகர் தனுஷ் இந்த நோய் பாதிக்கப்பட்டவராகத் தோன்றியிருப்பார். இதேபோல் தற்போது நிஜ வாழ்க்கையில் நடிகை ஒருவர் பைபோலார் டிஸ்ஆர்டர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளார்.
ஏராளமான டிவி தொடர்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஷாமா ஷிகந்தர், வெப்சீரிஸ் தொடர்களில் கவர்ச்சியான வேடங்களில் தோன்றி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.