ஆசியாவின் கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளனர் பாலிவுட் நடிகைகளான ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோனே.
லண்டனைச் சேர்ந்த பிரபல வார இதழான ஈஸ்டர்ன் ஐ, இணைய தளத்தில் 2019ஆம் ஆண்டு ஆசியாவின் கவர்ச்சியான பெண்கள் குறித்து கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட். இவருக்கு அடுத்த இடத்தை தீபிகா படுகோனே பெற்றுள்ளார்.
மேலும், மாடர்ன் பெண்களில் மிகவும் வலிமை வாய்ந்த பெண்மணியாகவும் ஆலியா பட் மாறியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த பத்து ஆண்டுகளில் கவர்ச்சி மிக்க ஆசியப் பெண்மணி என்ற பட்டியலில், தீபிகா படுகோனே முதல் இடத்தில் உள்ளார். கத்ரீனா கைஃப்புக்கு நான்காவது இடமும், சோனம் கபூருக்கு 10ஆவது இடமும் என இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கவர்ச்சியான ஆசியப் பெண்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த தீபிகா, தற்போது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா, புதுமுக நடிகை அனன்யா பாண்டே, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள், ஊடகங்களின் வெளிச்சம், சமூக வலை தளங்களில் அதிகம்பேரால் பேசப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆசியாவின் கவர்ச்சியான பெண்கள் வரிசையில் முதலாவதாக இருப்பது பற்றி நடிகை ஆலியா பட் கூறியதாவது,
'உண்மையான அழகு என்பது நல்ல மனதைப் பொறுத்துதான் இருக்கிறது என நான் நம்புகிறேன். நமக்கு வயதான பிறகு தோற்றம் மாறலாம். ஆனால், அவற்றைத் தாண்டி நாம் வெளிகாட்டும் குணமே அழகானவராகக் காட்டுகிறது. அதில் தான் நான் கவனம் செலுத்துகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் எனக்கு வாக்கு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
ரன்வீர் கபூர் ஜோடியாக ஆலியா பட் நடித்துள்ள கல்லிபாய் திரைப்படம் இந்த ஆண்டில் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் சிறந்த நடிப்புக்காக விருதுகளையும் வாரிக் குவித்து வருகிறார் ஆலியா. இதையடுத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இவருக்கு கவர்ச்சியான ஆசிய பெண்மணி என்ற மகுடம் மேலும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'நல்லது கொஞ்சம் லேட்டா தான் வரும்' - சமாளித்த ஆலியா