அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் படம் 'வாட்ச்மேன்'. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில், நடிகர் ஜிவி பிரகாஷ் சுமன் இயக்குநர் விஜய் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசுகையில், 'உண்மையான வாட்ச்மேன்கள் எல்லையில் நம் நாட்டைக் காக்கும் பாதுகாப்புப்படையினர்தான். ஆனால் சமீப காலமாக அரசியல்வாதிகள் தன்னை ஒரு காவலாளியாக கூறிக்கொள்கின்றனர்.
சமூக அக்கறை உள்ள பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ஜிவி பிரகாஷ் போன்றவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும். அவரின் பேச்சுகளைப் பார்க்கிறபோது அரசியல் பார்வையுடன் பேசுவதுடன் அவரது அரசியல் குறித்த அணுகுமுறைகள் நன்றாக தெரிகிறது.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது .இனி இவ்விதம் நடக்காமல் கண்காணிப்பதற்காக 50 சிசிடிவி கேமராவை அந்தப் பகுதியில் படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் முடிவு செய்திருக்கிறார்' என்றார்
இவரைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், 'பிடி செல்வகுமார் கூறியதுபோல் நாட்டின் உண்மையான வாட்ச்மேன்கள் என்றால் அது பாதுகாப்புப் படையினர்தான். மேலும், பெண்களின் முன்னேற்றத்துக்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தி பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். அப்போது நம் நாட்டை எல்லைகளை பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினருக்கு என்னால் முடிந்த சில உதவிகளை செய்யலாம் என்று இருக்கிறேன்' என தெரிவித்தார்.
இயக்குநர் விஜய் பேசுகையில், படத்தின் தலைப்பும் ஒரு வீட்டில் நடைபெறும் அசம்பாவிதங்களை தடுக்கும் நாய் பற்றிய கதைதான். அதனால்தான் இந்த படத்திற்கு வாட்ச்மேன் என்று பெயர் வைத்தோம் என்றார்.
இதில் விலங்குகள் பயன்படுத்தப்படுவதால் அதற்குரிய சான்றிதழ் வாங்குவதற்கு காலதாமதம் ஆகியது என குறிப்பிட்ட அவர், இருப்பினும் இந்தப் படம் எதிர்பார்த்தபடியே நன்றாக இருக்கிறது என தெரிவித்தார். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு படமாக அமையும் என்பதால் இந்தப் படத்தை பள்ளி விடுமுறை நாட்களில் வெளியிட முடிவு செய்தோம் என கூறினார்.