தெலுங்கில் நாகேஷ்வரராவ் நடிப்பில் வெளியான 'பிரேம நகர்' திரைப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதனை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கே.எஸ்.பிரகாஷ் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடிப்பில் காதல் காவியமாக உருவான படம்தான் "வசந்த மாளிகை".
பாலாஜி, வி.கே.ராமசாமி, ஏ. சகுந்தலா, குமாரி பத்மினி, நாகேஷ், ரமா, மேஜர் சுந்தர்ராஜன், ஆலம், எஸ்.ராகவன், பண்டரிபாய் ஆகியோரது நடிப்பில் 45 வருடங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 1972ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழகத்தில் திரையிட்ட இடமெல்லாம் மக்களின் வரவேற்பை பெற்று 25 வாரங்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது.
தமிழில் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முதல் திரைப்படமாக பார்க்கப்படும் இந்த"வசந்த மாளிகை" திரைப்படம், ஒரு பெண்ணை நேசிக்கும் காதலன், காதல் தோல்வி அடைந்தால் தாடி வளர்க்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்திய காலம் அது. வாணிஸ்ரீ கூந்தல் இளம்பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. மேலும், கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் என்றும் அழியாமல் காலங்கள் போற்றும் படமாக இருக்கிறது. விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் தயாரித்த இந்த படத்தில் ஏ வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், வசந்த மாளிகை காதல் காவியத்தை அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் ரசிக்கும் வகையில் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகிறது. இயக்குநர் வி.சி.குகநாதன் படத்தின் உரிமையை பெற்று டிஜிட்டலில் மாற்றி கலர் சேர்ப்புகளை சரி செய்து ரிலீஸ் செய்கிறார். தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் மெருக்கேற்றி வசந்த மாளிகை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிவாஜிகணேசனின் மூத்த மகனும் தயாரிப்பாளருமான ராம்குமார் ,பின்னணி பாடகி பி.சுசிலா, வி.சி.குகநாதன், ஜெயா குகநாதன். எஸ்.பி. முத்துராமன், சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின்னணி பாடகி சுசிலா, கலைமகள் கைப்பொருளே மயக்கம் என்ற பாடலை மேடையில் பாடி அசத்தினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், 'எனக்கும் சிவாஜிக்கும் ஆன உறவு அண்ணன் தங்கை உறவு. நடிகர் சிவாஜிகணேசன் சின்ன சின்ன பாவனைகளையும் தனது முகத்தில் அற்புதமாக பிரதிபலித்து நடிக்க கூடியவர். அவர் அப்படி நடித்ததால்தான் நாங்கள் பாடிய பாடல்களுக்கு உயிர் வந்தது. எங்களுக்கு பேரும் புகழும் கிடைத்தது' என்று கூறினார். மேலும் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் பேசினர்.
டிஜிட்டல் முறையில் முழு வடிவம் பெற்றுள்ள வசந்த மாளிகை திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.