சென்னை: முழுக்க முழுக்க நகைச்சுவை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸ் தொடரில் நடிகர் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வடிவேலு இல்லாத படங்கள் இல்லை என்கிற அளவுக்கு அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. அத்தனை படங்களிலும் தனது காமெடி சரவெடியால் அனைத்து தரப்பினரையும் சிரக்க வைத்தார்.
இதையடுத்து சில காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக விரல்விட்டு என்னும் அளவு மிகக் குறைவான படங்களிலேயே நடித்தார்.
ஆனாலும் அவரது காமெடி தினந்தோறும் அனைத்து டிவி சேனல்களிலும் தவறாமல் ஒளிபரப்பாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.
இதையடுத்து சினிமாவில் தன்னை ஒப்பந்தம் செய்வதில் பலர் பிரச்னை செய்வதாகக் கூறிய அவர், வெப் சீரிஸில் நடிப்பேன் எனப் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
சினிமா நடிகர்கள் பலர் வெப் சீரிஸ் தொடர்களை நோக்கி படையெடுக்கும் வேளையில் தற்போது வடிவேலுவும் தான் சொன்னபடி செய்திருப்பதுடன், இந்தப் புதிய பரிணாமத்தில் கலகலப்பூட்டவுள்ளார்.