ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் 'மிஷன் இம்பாசிபிள்' படமும் அடங்கும். ஆக்ஷன் காட்சியில் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி வசூலிலும் சாதனை படைத்தன. இப்போது இந்தப் படத்தின் ஏழாவது பாகம் உருவாகிவருகிறது.
இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் இத்தாலியில் நடந்துவந்தது. அப்போது அங்கு பணியாற்றிய படக்குழுவினர் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து படக்குழுப் படப்பிடிப்பை நிறுத்தியது. பின்னர் கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு மாற்றப்பட்டது. இப்போது இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
மிஷன் இம்பாசிபிள் ஷுட்டிங்
இங்கிலாந்தில் உள்ள லாங்க்கிரஸ் (Longcross) படப்பிடிப்புத் தளத்தில் மிஷன் இம்பாசிபிள் ஷுட்டிங் தொடங்கியது. இதற்காக கிறிஸ்துமஸ் கொண்டாட்ட இடைவெளிக்குப்பின், டாம் குரூஸ் படப்பிடிப்பிற்காக இங்கிலாந்து வந்துள்ளார்.
இப்படம் லாங்க்கிராஸ் ஸ்டுடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டுடியோ கரோனா நெறிமுறைகளின் அடுக்கு 4இன்கீழ் வருகிறது. அதாவது கரோனா நெறிமுறைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகளின் கீழ்ப் படக்குழுவினர் அனுமதிக்கப்படுகின்றனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டும் கிறிஸ்டோபர் மிக்வாரி இயக்கத்தில் எடுக்கப்பட்டுவரும் டாம் குரூஸின் 'மிஷன் இம்பாசிபிள் 7' பாகம் நவம்பர் 19, 2021 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாள்களாக புது வகையான கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்தப் புதுவகை வைரசானது முன்பிருந்த கரோனா வைரசைவிட மிக எளிதில் பரவுகிறது எனத் தெரியவந்துள்ளது. இச்சமயத்தில் பிரபல ஹாலிவுட் கதாநாயகன், டாம் குரூஸ் படப்பிடிப்பிற்காக இங்கிலாந்து திரும்பியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.