தமிழ் சினிமாவின் கமர்ஷியல் நடிகர்களில் அஜித் முக்கியமானவர். ஆனால், அவர் தொடர் தோல்விகளை சந்தித்தார். இந்த சூழலில் பில்லா படம் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்தது.
இதனால் அஜித் மீண்டும் கோலிவுட் ரேஸுக்குள் நுழைந்துவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்க பில்லாவுக்கு அடுத்து அஜித் நடித்த ஏகன், அசல் போன்ற திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தன.
அஜித் சந்தித்த பிரச்னை
அசல் சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாச தலைவனுக்கு பாராட்டு விழா சர்ச்சை அஜித்துக்கு சிக்கலை கொடுக்க அவரது ரசிகர்கள் விரக்தியின் உச்சத்துக்கு சென்றனர்.
![மங்காத்தா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12925837_ulit.jpg)
இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாகவும் அறிவித்தார் அஜித். இதனையடுத்து, அவரது 50ஆவது திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அந்த லிஸ்ட்டில் கௌதம் மேனன் பெயரும் இடம்பெற்றிருந்தது.
என்னது வெங்கட் பிரபுவா?
ஏகன், அசல் திரைப்படங்களின் தோல்வி, பாச தலைவனுக்கு பாராட்டு விழா சர்ச்சை என அஜித்தை சுற்றி பல பிரச்னைகள் வட்டமடிக்க 50ஆவது படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அவர்.
அந்தச் சூழலில் அஜித்தின் 50ஆவது படத்தின் பெயர் மங்காத்தா எனவும் அதனை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார் என்ற அறிவிப்பும் வெளியானது.
![மங்காத்தா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12925837_villanm.jpg)
நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் தலயின் 50ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாரா என்று அஜித் ரசிகர்கள் தலையை சொறிந்தனர்.
வெங்கட் பிரபுவின் தரமான கேம்
வெங்கட் பிரபு அதற்கு முன்னர் செய்திருந்த படங்கள் ஹிட் அடித்திருந்தாலும் அவை எல்லாம் ஜாலியான படங்கள். எனவே அவரால் அஜித்தின் மாஸுக்கு தகுந்தவாறு படத்தை எடுக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாகவே பலரது மத்தியில் எழுந்தது.
ஆனாலும் வெங்கட் பிரபு மீதும், அவர் கூறிய கதையின் மீது நம்பிக்கை வைத்து அஜித் ஷூட்டிங் சென்றார். அஜித்துக்கு எப்போதும் ஹிட் பாடல்களை கொடுத்தவரும், பில்லா தீம் மியூசிக் மூலம் அஜித் ரசிகர்களை கட்டிப்போட்டவருமான யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.
![மங்காத்தா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12925837_thala.jpg)
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றாலும் படத்தின் தீம் மியூசிக் ரசிகர்களிடையே வைரலானது.
மங்காத்தாவின் ஓப்பனிங்
இதனையடுத்து யுவனின் பிறந்தநாளான 31ஆம் தேதி (2011) படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது படக்குழு.
அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்ததால் படத்திற்கான ஓப்பனிங் எப்படி இருக்கும் என்று ஒட்டுமொத்த கோலிவுட்டும் எதிர்பார்ப்பில் இருந்தது.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் மங்காத்தா படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைத்தது. அதுமட்டுமின்றி படத்திலும் அஜித்தையும் வேறு பரிமாணத்தில் வெங்கட் பிரபு காட்டியிருந்தார்.
![மங்காத்தா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12925837_vilaya.jpg)
வாலி படத்தில் ஏற்கனவே அஜித் வில்லனாக நடித்திருந்தாலும் அதில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருப்பார். ஆனால் மங்காத்தாவில் வில்லத்தனத்தின் உச்சத்திற்கு சென்று அஜித் நடித்திருந்ததால் அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.
அதற்காக மட்டும் இல்லாமல் வெங்கட் பிரபுவின் அசத்தலான ஸ்க்ரீன் ப்ளே, யுவன் சங்கர் ராஜாவின் இசை தாண்டவம், க்ளைமேக்ஸில் இருந்த ட்விஸ்ட் என மங்காத்தா அஜித் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து சென்சேஷனல் ஹிட்டாக மாறியது.
![மங்காத்தா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12925837_velayu.jpg)
தற்போது மங்காத்தா வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை ஒட்டி 10 years of மங்காத்தா என்று பதிவிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க: நினைவில் சேர்ந்திருப்போம்... யுவனும் முத்துவும் இசையின் நட்பு! #HBDyuvan