’வைகைப்புயல்’ வடிவேலு தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாவர். கடந்த சில ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறார்.
அவருடைய படம், நகைச்சுவைக் காட்சிகள் அல்லாத மீம்ஸ்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றே கூறலாம்.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
வ்டிவேலு தன் திரைப்பயணத்தில் பல படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்திருந்தாலும், ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்.
2006ஆம் ஆண்டும் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தில் இளவரசு, நாசர், மனோரமா, ஸ்ரீமன் மோனிகா, தேஜாஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சபேஷ் - முரளி இசை அமைத்திருந்தனர்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 2017ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் சிம்பு தேவன், தயாரிப்பாளர் சங்கர் இருவரும் முடிவு செய்தனர்.
பூதாகரமாக வெடித்த சங்கர்- வடிவேலு பிரச்னை
இப்படத்திற்க்கு ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ என்று தலைப்பு வைத்து வடிவேலுவையே மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமும் செய்தனர்.
ஆனால் படம் தொடங்கிய சில நாள்களிலேயே வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டார். இதனையடுத்து பட வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
ரெட் கார்டு
தொடர்ந்து இயக்குநர் சங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இந்தப் பிரச்னை தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றது. வடிவேலுவுக்கும் ரெட் கார்டு தரப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக வடிவேலு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சங்கர் - வடிவேலு இடையே உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வடிவேலு மீது இருந்த ரெட் கார்டு தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது.
தடை நீக்கம்
இதனையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்க வடிவேலு ஆயத்தமாகி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் மீண்டும் வடிவேலு நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இதனை வடிவேலு மறுத்துள்ளார்.
’புலிகேசியை மனதில் இருந்து அழித்துவிட்டேன்'
இனி எஸ் பிக்சர்ஸ்க்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றும், புலிகேசியை எனது மனதில் இருந்து அழித்துவிட்டேன் என்றும் வடிவேலு கூறியுள்ளாராம்.
மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற ராஜா கதைகளில் தான் நடிக்கப்போவதில்லை என்றும், இந்தப் படத்தில் ஒத்துக்கொண்டதால் தான் தனக்கு கெட்ட நேரம் தொடங்கியது என்றும் வடிவேலு கூறியதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சிம்பு’னா சும்மாவா.... 300 நாள்களில் 3 மில்லியன் ஃபாலோயர்கள்!