சென்னை: 'சினம்' படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் படக்குழுவினர் முடித்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் தொடங்கவுள்ளனர்.
மூவி ஸ்லைடர் தயாரிப்பில் அருண் விஜய் நடித்து ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கத்தில் உருவாகிவரும் படம் “சினம்”. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் நடைபெற்றது. படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை எடுத்து படக்குழுவினர் படத்தை முடித்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் குமரவேல் கூறியதாவது:
நடிகர் அருண் விஜய்யின் ஒத்துழைப்பு இல்லையெனில் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவர் தற்போது தொடர் வெற்றிகளுடன், ஒரே கட்டமாக பல படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்து வெளியீடான 'மாஃபியா' படத்தின் பணிகளுக்கும் அவர் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஆனால் இத்தனை பணிகளுக்கு மத்தியிலும் இப்படத்துக்கு நேரம் ஒதுக்கி, சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க பெரும் ஆதரவாக இருந்தார்.
ஒரு ஆக்ஷன் காட்சியை எடுத்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனால் கொஞ்சம் கூட அதனை பொருட்படுத்தாமல் உடனே தயாராகி அந்தக் காட்சியில் நடித்து முடித்தார். நம்பிக்கை மற்றும் உழைப்பின் வழியாக அவர் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் அவர்.
படப்பிடிப்பை இத்தனை சீக்கிரம் முடிக்க, கடினமாக உழைத்த எனது படக்குழுவுக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த மாத இறுதியில் படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். காளி வெங்கட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பாரி வெங்கட் என்ற கேரக்டரில் காவல் துறை அதிகாரியாக தோன்றவுள்ளார் அருண் விஜய்.